பராய் மரங்கள் நிறைந்த வனமாக இருந்ததால் இத்தலம் 'பராய்த்துறை' என்று பெயர் பெற்றது. அதனால் இத்தலத்து மூலவர் 'பராய்த்துறைநாதர்' என்ற பெயர் பெற்றார். சிறிய லிங்க வடிவம். அம்பிகை 'பொன்மயிலம்மை' என்னும் திருநாமத்துடன் காட்சி தருகின்றாள்.
இத்தலத்திற்கு தாருகாவனம் என்ற பெயரும் உண்டு. சிவபெருமான் பிட்சாடனர் வடிவத்தில் வந்து முனிவர்களின் செருக்கை அழித்த தலம்.
கோயிலின் அருகில் காவிரி நதி ஓடுகின்றது. ஐப்பசி மாதத்தின் முதல் நாளில் இங்குள்ள காவிரியில் நீராடுவது சிறப்பு. இவ்விழா விஷேசமாகக் கொண்டாடப்படுகிறது. ஐப்பசி மாத கடைசி நாளில் மாயூரத்தில் 'கடைமுழுக்கு' என்ற பெயரில் விழா சிறப்பாக நடைபெறுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் புராட்டாசி மாதம் 18ஆம் நாள் சூரியனின் கதிர்கள் மூலவர் மீது விழுகின்றன. வைகாசி விசாகத்தையொட்டி பிரம்மோற்சவம் நடைபெறுகிறது.
இந்திரன், குபேரன், சப்த ரிஷிகள் ஆகியோர் இத்தலத்து இறைவனை வழிபட்டுள்ளனர்.
இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தமது திருப்புகழால் போற்றிப் வணங்கியுள்ளார்.
திருஞானசம்பந்தர் ஒரு பதிகமும், திருநாவுக்கரசர் ஒரு பதிகமும் பாடியுள்ளனர்.
இக்கோயில் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|